தொலைநோக்கு
பொதுமக்களின் சிவில் உரிமைகள், அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் சட்டபூர்வமான உரிமைகளை உறுதிப்படுத்தும் ஆவணங்களைப் பதிவு செய்தல், பாதுகாத்தல் மற்றும் உறுதிப்படுத்தப்பட்ட பிரதிகளை விநியோகித்தல் ஆகியவற்றில் மக்களை மையப்படுத்தப்பட்ட சேவைகளை வழங்குவதில் முன்னோடியாகச் செயற்படல்
குறிக்கோள்
அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் தொடர்பான சட்ட ஆவணங்களைப் பதிவு செய்தல், இலங்கையில் காணி உரிமைகளைப் பதிவு செய்தல் மற்றும் மனித வாழ்வின் முக்கிய நிகழ்வுகளான திருமணம், பிறப்பு மற்றும் இறப்பு ஆகியவற்றைப் பதிவு செய்தல், அவ்வாவணங்களைப் பாதுகாத்தல் மற்றும் கோரிக்கையின் பேரில் அவற்றின் உறுதிப்படுத்தப்பட்ட பிரதிகளை விநியோகிப்பதன் மூலம் பொதுமக்கள் தமது உரிமைகளைப் பாதுகாப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குதல்
பதிவாளர் நாயகம் திணைக்களம் பற்றி
பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் கீழ் இயங்கும் பதிவாளர் நாயகம் திணைக்களம், இலங்கை மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்குடன் பிறப்பு, திருமணம், இறப்பு மற்றும் சொத்துக்கள் தொடர்பான சட்ட ஆவணங்களைப் பதிவு செய்வதற்காக நிறுவப்பட்டது.
இத்திணைக்களமானது முதன்முதலில் 1864 ஆம் ஆண்டில் காணிகளைப் பதிவுசெய்யும் நோக்கத்திற்காக நிறுவப்பட்டதோடு அதன் பின்னர் பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு பதிவு போன்ற சிவில் பதிவு நடவடிக்கைகள் இத்திணைக்களத்திற்கு ஒதுக்கப்பட்டது 1867 ஆம் ஆண்டிலேயாகும்.
ஆவணப் பதிவு மற்றும் காணி உரிமைப் பதிவுக்காக நாடளாவிய ரீதியில் 07 மாகாண/வலய அலுவலகங்கள், 14 மாவட்ட உதவிப் பதிவாளர் நாயகம் அலுவலகங்கள், 50 காணிப் பதிவு அலுவலகங்கள், 09 ஆவணக் காப்பகங்கள், தூதரகப் பிரிவு, 'சுஹுருபாய' சேவைப் பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள சான்றிதழ் பிரதிகள் விநியோகிக்கும் மற்றும் சான்றிதழ் மொழிபெயர்ப்புச் சேவை மற்றும் 336 மேலதிக மாவட்டப் பதிவாளர் அலுவலகங்கள் நிறுவப்பட்டுள்ளன.
1998 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க காணி உரித்து பதிவுச் சட்டத்தின் கீழ் காணி உரித்துகளைப் பதிவு செய்யும் நடவடிக்கையும் இத்திணைக்களத்திற்கு ஒதுக்கப்பட்ட பணியாகும். இதற்கமைய, இலங்கையின் மிக முக்கியமான திணைக்களங்களில் ஒன்றான பதிவாளர் நாயகம் திணைக்களமானது பரந்தளவிலான செயற்பாடுகளை உள்ளடக்கி பொதுமக்களுக்கு மிகவும் வினைத்திறனான சேவைகளை வழங்கி வருகின்றது.
பதிவாளர் நாயகம் திணைக்களம் தனது தொலைநோக்குப் பார்வை மற்றும் குறிக்கோளை நிறைவேற்றிக் கொள்வதற்காக அனைத்துப் பிரிவுகளும் ஒட்டுமொத்த நிர்வாகக் கட்டமைப்பும் ஒன்றிணைந்து செயற்படுவதுடன், தனது சேவையின் தரத்தை மேம்படுத்துவதற்கும் மக்கள் நேயமிக்க வினைத்திறனான சேவையை வழங்குவதற்கும் நவீன தொழில்நுட்பத்தினூடாக தனது அபிவிருத்தி மற்றும் ஆய்வு நடவடிக்கைகளில் விசேட அவதானம் செலுத்தியுள்ளதுடன், சர்வதேச ரீதியாக தனது விடயப்பரப்புடன் தொடர்புடைய புதிய போக்குகளையும் ஆய்வு செய்து வருகின்றது. தற்போது பதிவாளர் நாயகம் திணைக்களத்தினால் ஈ-திருமணம், ஈ-காணி, ஈ-சனத்தொகை, ஈ-உறுதி உள்ளிட்ட மின்னியல்-திட்டங்களும் (e-programs), உறுதி மற்றும் காணிப் பதிவேடுகளை விநியோகிக்கும் ஒருநாள் சேவைத் திட்டமும், இணையவழி ஊடாகப் பிறப்பு, திருமண, இறப்புச் சான்றிதழ்களை விநியோகிக்கும் திட்டமும் இலங்கை மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.