வீட்டில் நிகழ்ந்த இறப்பினை பதிவு செய்தல்
மரணம் நிகழ்ந்த 05 நாட்களுக்குள் கிராம உத்தியோகத்தருக்கு தெரிவித்தல் வேண்டும்.
ஒவ்வொரு மரணத்தையும் தொடர்பாகவும், அந்த மரணத்திற்குரிய B24 படிவத்திற்கு அமைவாகத் தயாரிக்கப்பட்ட அறிக்கையொன்றை, மரணம் நிகழ்ந்த இடத்திற்குரிய பிறப்பு மற்றும் இறப்புப் பதிவாளருக்கு கிராம உத்தியோகத்தர் அனுப்பி வைக்க வேண்டும்.
மரணம் நிகழ்ந்த இடத்திற்குரிய பிறப்பு மற்றும் இறப்புப் பதிவாளரினால் மரணம் பதிவு செய்யப்படும்..
இறப்பு பதிவு படிவம் CR02 பதிவாளரிடம் இருந்து பெற்றுக் கொள்ளலாம். ![]()
மரணத்தை அறிவிப்பதற்குத் தகுதியுள்ள நபர்கள்,
- மரணம் நிகழ்ந்த சந்தர்ப்பத்தில் அருகிலிருந்த நெருங்கிய உறவினர்
- இறுதியாக நோயுற்றிருந்த போது பணிவிடை செய்த நெருங்கிய உறவினர்
- அவ்வாறான உறவினர் இல்லாத நிலையில்,
- இறந்தவர் வசித்த பதிவாளர் பிரிவில் வசிக்கும் இறந்தவரின் உறவினர்
- அவ்வாறான உறவினர் இல்லாத நிலையில்,
- இறக்கும் போது அருகிலிருந்த ஒருவர்
- மரணம் நிகழ்ந்த கட்டிடத்தில் வசிப்பவர்
- மேற்குறித்த நபர்கள் இல்லாத சந்தர்ப்பத்தில்,
- சடலத்தை அடக்கம் செய்ய, தகனம் செய்ய அல்லது வேறு ஏதேனும் வகையில் இறுதிக்கிரியைகளை முன்னெடுக்கும் நபர்.
இறப்பு நிகழ்ந்த 03 மாதங்களுக்குள் மரணத்தை இலவசமாகப் பதிவு செய்து கொள்ளலாம்.
இறப்பு நிகழ்ந்து 03 மாதங்களுக்குப் பின்னரும் மரணத்தைப் பதிவு செய்துகொள்ளும் வசதி உள்ளதுடன், அதற்காக "தாமதமான மரணப் பதிவு செய்தல்" தொடர்பான விபரங்களைப் பார்வையிடவும்.
அறிவிப்பவருக்கு மரணச் சான்றிதழ் ஒன்று இலவசமாக வழங்கப்படும்.
** நீங்கள் குறித்த இறப்புச் சான்றிதழைப் பெற்றவுடன், அதை வாசித்து பார்த்த பின்னர் எடுத்துச் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
(1951 ஆம் ஆண்டின் 17ம் இலக்க பிறப்பு மற்றும் இறப்பு பதிவு செய்தல் கட்டளைச் சட்டத்தின் ஏற்பாடுகள் பொருந்தும்.)
வைத்தியசாலையில் (அரசு அல்லது தனியார்) நிகழ்ந்த மரணத்தைப் பதிவு செய்தல்
மரணம் வைத்தியசாலையில் நிகழ்ந்திருப்பின், அந்த வைத்தியசாலைக்குரிய பிறப்பு மற்றும் இறப்புப் பதிவாளருக்கு மரணத்தை பதிவு செய்ய அறிவிக்க வேண்டும்.
மரணத்தை அறிவிப்பதற்குத் தேவையான பிரகடனத்தை (பதிவு செய்வதற்கான CR02 படிவம்) பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளரிடமிருந்து பெற்றுக் கொள்ளல் வேண்டும்.
மரணத்தைப் பதிவு செய்ய அறிவித்தல் வழங்குவதற்குத் தகுதியான நபர்கள்,
- இறந்தவரின் உறவினர் ஒருவர்
- மரணம் நிகழ்ந்த சந்தர்ப்பத்தில் அருகில் இருந்த நபர்
- வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி (மருத்துவ அதிகாரி)
சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்,
- முறையாகப் பூர்த்தி செய்யப்பட்ட பதிவு செய்தல் படிவம் CR02
- மரணம் நிகழ்ந்ததை உறுதிப்படுத்துவதற்கு வைத்தியசாலையினால் வழங்கப்பட்ட அறிக்கை
- 03 மாத காலத்திற்குள் ஒரு மரணத்தை இலவசமாகப் பதிவு செய்து கொள்ளலாம்.
** நீங்கள் குறித்த இறப்புச் சான்றிதழைப் பெற்றவுடன், அதை வாசித்து பரீட்சித்ததன் பின்னர் எடுத்துச் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
(1951 ஆம் ஆண்டின் 17ம் இலக்க பிறப்பு மற்றும் இறப்பு பதிவு செய்தல் கட்டளைச் சட்டத்தின் ஏற்பாடுகள் பொருந்தும்.)
பதிவுசெய்யப்பட்ட தோட்டத்தில் நிகழும் மரணத்தைப் பதிவு செய்தல்
மரணம் நிகழ்ந்து 24 மணித்தியாலங்களுக்குள் பின்வரும் தகுதியுள்ள நபர்களால் தோட்ட அதிகாரியிடம் மரணம் குறித்து அறிவிக்கப்பட வேண்டும்.
அறிவித்தல் வழங்குவதற்குத் தகுதியான நபர்கள்,
- இறந்தவரின் உறவினர் ஒருவர்
- மரணம் நிகழ்ந்த சந்தர்ப்பத்தில் அருகில் இருந்த நபர்
- மரணம் நிகழ்ந்த கட்டிடத்தில் வசிப்பவர்
- மரணம் தொடர்பான இறுதிச் சடங்குகளை மேற்கொள்பவர்கள்
சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் - தோட்ட அதிகாரியினால் மரண அறிக்கை பதியப்பட்டு சான்றளிக்கப்பட்ட தோட்ட அதிகாரி மரண அறிக்கை (பதிவு செய்வதற்கான CR02 படிவம்), மாவட்ட மருத்துவ அதிகாரி ஊடாக பிரதேச செயலகத்தின் மேலதிக மாவட்டப் பதிவாளருக்கு அனுப்பி வைக்கப்படும்
- மரணமடைந்தவரின் மருத்துவ அறிக்கைகள் இருப்பின்
- மரணமடைந்தவரின் மருத்துவ சிகிச்சை நிலைய அறிக்கைகள் இருப்பின்
மேலதிக மாவட்டப் பதிவாளரால் இறப்பு பதிவு செய்யப்பட்டு, இறப்புச் சான்றிதழ் உரிய தோட்ட அதிகாரிக்கு அனுப்பி வைக்கப்படும்.
விண்ணப்பதாரர் இறப்புச் சான்றிதழை தோட்ட அதிகாரியின் அலுவலகத்திலிருந்து இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம்.
வெளிநாட்டில் ஏற்பட்ட இலங்கையர் ஒருவரின் மரணத்தை வெளிநாட்டில் பதிவு செய்தல்
இறக்கும் போது இலங்கை பிரஜையாக அல்லது இரட்டைப் பிரஜாவுரிமை கொண்டவராக இருந்த ஒருவரின் மரணத்தை வெளிநாட்டில் பதிவு செய்ய முடியும்.
மரணம் நிகழ்ந்த நாட்டிலுள்ள இலங்கைத் தூதரகம் அல்லது உயர்ஸ்தானிகராலயத்தினால் அந்த மரணம் பதிவு செய்யப்படும்.
மரண அறிவித்தலை வழங்குவதற்குத் தேவையான மரணப் பிரகடனப் படிவத்தை, இலங்கைத் தூதரகம் அல்லது உயர்ஸ்தானிகராலயத்தில் பெற்றுக்கொள்ள முடியும்
மரணத்தைப் பதிவு செய்வதற்கான அறிவித்தலை வழங்கத் தகுதியுள்ள நபர்கள்,
- இறந்தவரின் நெருங்கிய உறவின்
- இறக்கும் போது அருகில் இருந்த நபர்
சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் (அசல் மற்றும் ஒரு தொகுப்பு நிழற்பட நகல்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்),
- இலங்கை பிரஜை அல்லது இரட்டைப் பிரஜை என்பதை உறுதிப்படுத்துவதற்கான ஆவணங்கள் (விசா அனுமதிப்பத்திரம் / இரட்டை குடியுரிமைச் சான்றிதழ்).
- மரணமடைந்தவரின் கடவுச்சீட்டு (மரணத்தின் போது செல்லுபடியாகக் கூடியதாக இருத்தல் வேண்டும்)
- குறித்த அந்த நாட்டில் வழங்கப்பட்ட மரணச் சான்றிதழ்
- மரணத்திற்கான காரணத்தைக் குறிப்பிடும் மருத்துவமனை அறிக்கை
- பிரதேச செயலகத்தினால் வழங்கப்பட்ட உயிரிழந்தவரின் பிறப்புச் சான்றிதழின் உறுதிப்படுத்தப்பட்ட பிரதி
- அறிவிப்பாளரின் உறவு முறையை நிரூபிக்கும் ஆவணம் (தேவைக்கேற்ப பிறப்பு அல்லது திருமணச் சான்றிதழ்)
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சினால் நிர்ணயிக்கப்பட்ட அரச கட்டணமானது சம்பந்தப்பட்ட நாட்டின் செல்லுபடியாகும் நாணயத்தில் செலுத்தப்பட வேண்டும்.
வெளிநாட்டில் மரணித்த ஒருவரின் மரணத்தை இலங்கையில் பதிவு செய்தல்
சம்பந்தப்பட்ட நாட்டின் தூதரகம்/உயர்ஸ்தானிகராலயம் ஊடாக ஒரு வருட காலத்திற்குள் அரச கட்டணங்களைச் செலுத்தி மரணத்தைப் பதிவு செய்யத் தவறும் பட்சத்தில், ஒரு வருட காலாவதிக்குப் பின்னர் அதனைப் பிந்திய மரணப் பதிவாக (Delayed Death Registration) மேற்கொள்வதற்கு பின்வரும் ஆவணங்களை மரணம் நிகழ்ந்த நாட்டில் உள்ள தூதரகம்/உயர்ஸ்தானிகராலயத்தில் ஒப்படைக்கலாம். இக்கோரிக்கையானது உரிய தூதரகத்தினால் அங்கீகாரத்திற்காக 'சுஹுருபாய' (Suhurupaya) கட்டிடத்தின் 15-வது மாடியில் அமைந்துள்ள தூதரகப் பிரிவுக்கு (Consular Division) அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
மேலதிகமாக, வெளிநாட்டிலுள்ள தூதரகம்/உயர்ஸ்தானிகராலயத்தினால் மரணம் பதிவு செய்யப்படாத பட்சத்தில், 'சுஹுருபாய' கட்டிடத்தின் 15-வது மாடியில் அமைந்துள்ள தூதரகப் பிரிவில் (Consular Division) ஆவணங்களைச் சமர்ப்பிப்பதன் மூலம் மரணத்தைப் பதிவு செய்து கொள்ளலாம்.
மரண அறிவித்தலை வழங்குவதற்குத் தேவையான பிரகடனப் படிவமானது (Declaration Form), 'சுஹுருபாய' (Suhurupaya) கட்டிடத்தின் 15-வது மாடியில் அமைந்துள்ள தூதரகப் பிரிவில் (Consular Division) பெற்றுக்கொள்ளப்பட வேண்டும்.
மரணமடைந்தவர் இலங்கை பிரஜையாகவோ அல்லது இரட்டைக் குடியுரிமை கொண்டவராகவோ இருக்க வேண்டும்.
மரணத்தைப் பதிவு செய்வதற்கான அறிவிப்பாளராக உயிரிழந்தவரின் கணவன்/மனைவி, தாய், தந்தை, சகோதரர்/சகோதரி, பிள்ளை அல்லது அத்தகையவர்கள் எவரும் இல்லாத பட்சத்தில், அது தொடர்பாக அக்கறையுள்ள ஒரு தரப்பினர் முன்வரலாம்.
சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் (அசல் மற்றும் ஒரு தொகுதி நிழற்படப் பிரதிகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்),
- முறையாகப் பூர்த்தி செய்யப்பட்ட பிரகடனப் படிவம்
- வெளிநாட்டு மரணச் சான்றிதழ்
- மரணச் சான்றிதழில் மரணத்திற்கான காரணம் குறிப்பிடப்பட்டிருக்காவிடின், மரணத்திற்கான காரணத்தைக் குறிப்பிடும் அறிக்கை
- பிரதேச செயலகத்தினால் வழங்கப்பட்ட உயிரிழந்தவரின் பிறப்புச் சான்றிதழின் உறுதிப்படுத்தப்பட்ட பிரதி
- உயிரிழந்தவரின் கடவுச்சீட்டு
- உடல் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டிருப்பின், அதற்கான பற்றுச்சீட்டு
- அறிவிப்பாளரின் உறவுமுறையை உறுதிப்படுத்தும் ஆவணம் (தேவைக்கேற்ப பிறப்பு அல்லது திருமணச் சான்றிதழ்)
- இறுதிக் கிரியைகள் இலங்கையில் நடத்தப்பட்டிருந்தால், அதற்கான போக்குவரத்துப் பற்றுச்சீட்டுகள்
- வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சினால் வழங்கப்பட்ட கடிதம் (இலங்கையில் இறுதிக்கிரியைகள் இடம்பெறுமாயின்)
- அறிவிப்பாளரின் தேசிய அடையாள அட்டையின் புகைப்படப் பிரதி
- அறிவிப்பாளரின் முகவரி மற்றும் உரிய முத்திரை ஒட்டப்பட்ட 9*4 அளவிலான கடித உறை
- குறித்த நோக்கத்திற்காக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் தூதரகப் பிரிவுக்கு ரூபா 8,180/- பதிவுக்கட்டணமாகச் செலுத்திப் பெற்றுக்கொண்ட பற்றுச்சீட்டு
- சிங்களம், ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிகள் தவிர்ந்த ஏனைய மொழிகளிலுள்ள ஆவணங்களின் மொழிபெயர்ப்புகள்
**இது தொடர்பான மேலதிக விபரங்களை பின்வரும் முகவரிக்கு வினவுவதன் மூலம் பெற்றுக்கொள்ளலாம்: உதவிப் பதிவாளர் நாயகம், தூதரகப் பிரிவு, பதிவாளர் நாயகம் திணைக்களம், 15-வது மாடி, "சுஹுருபாய", பத்தரமுல்ல. மேலும், பின்வரும் தொலைபேசி எண்கள் ஊடாகவும் தொடர்புகொள்ளலாம். தொலைபேசி எண்கள்: +94 112 796 127 அல்லது 071 4425143