இலங்கை அரசாங்கத்தின் தொடர்ச்சியான டிஜிட்டல் உருமாற்றத் திட்டத்தின் ஒரு பகுதியாக, பதிவாளர் நாயகம் திணைக்களம் (RGD) தனது மின்னணு பிறப்பு, திருமணம் மற்றும் இறப்புப் பதிவு முறையை (eBMD) உத்தியோகபூர்வமாக வெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்களுக்கும் விரிவாக்கியுள்ளது.
2025 பெப்ரவரி 7 முதல் நடைமுறைக்கு வரும் வகையில், வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கை பிரஜைகள், இலங்கையில் பதிவு செய்யப்பட்ட பிறப்பு, திருமணம் மற்றும் இறப்புச் சான்றிதழ்களின் சான்றளிக்கப்பட்ட அசல் பிரதிகளை, அவர்கள் வசிக்கும் நாட்டிலுள்ள அருகிலுள்ள இலங்கைத் தூதரகம் அல்லது தூதரக அலுவலகம் ஊடாக நேரடியாகப் பெற்றுக்கொள்ள முடியும்.
இந்த மைல்கல் திணைக்களத்தின் டிஜிட்டல் மயமாக்கல் பயணத்தில் ஒரு முக்கியமான முன்னேற்றத்தைக் குறிப்பதோடு, டிஜிட்டல் கண்டுபிடிப்புகள் மூலம் குடிமக்களுக்கு ஏற்ற, திறமையான மற்றும் உலகளாவிய ரீதியில் அணுகக்கூடிய பொதுச் சேவைகளை வழங்குவதற்கான இலங்கையின் வலுவான அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது.