வீட்டில் நிகழ்ந்த பிறப்பொன்றைப் பதிவு செய்தல்
பிறப்பு நிகழ்ந்து 07 நாட்களுக்குள் கிராம உத்தியோகத்தருக்கு அறிவித்தல் வேண்டும்.
ஒவ்வொரு பிறப்பு சம்பந்தமாகவும் அந்த பிறப்பு தொடர்பான படிவம் B23 இன் பிரகாரம் பூர்த்தி செய்யப்பட்ட அறிக்கையை கிராம உத்தியோகத்தரினால் பிறப்பு நிகழ்ந்த இடத்திற்குரிய பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளருக்கு அனுப்புதல் வேண்டும்.
பிறப்பு நிகழ்ந்த இடத்திற்காக நியமிக்கப்பட்டுள்ள பிறப்பு மற்றும் இறப்புப் பதிவாளர் பிரிவின் பதிவாளரினால் இப்பிறப்புகள் பதிவு செய்யப்படுகின்றன.
முறையாக பூர்த்தி செய்யப்பட்ட பதிவு செய்தல் CR01 படிவத்தை பிறப்பு நிகழ்ந்த இடத்திற்குரிய பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளரிடம் கையளித்தல் வேண்டும். குறித்த CR01 படிவத்தை பிறப்பு நிகழ்ந்த இடத்தின் பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளரிடமிருந்து அல்லது இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து பெற்றுக்கொள்ளலாம். ![]()
பிறப்பு தொடர்பாக அறிவிப்பதற்கு தகுதி பெற்ற நபர்கள்
- தந்தை
- தாய்
- குழந்தை பிறக்கும் சந்தர்ப்பத்தில் அருகில் இருந்தவர்கள்
- பாதுகாவலர்
பிறப்பு தொடர்பாக அறிவிப்பதற்கு தகுதியான நபர்களால் சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள்
- சரியாகப் பூர்த்தி செய்யப்பட்ட பதிவுக்கான CR01 படிவம்
- பெற்றோரின் திருமணச் சான்றிதழின் புகைப்படப் பிரதி (இல்லையெனில் இலக்கம் 7 ஐப் பார்க்கவும்)
- பெற்றோரின் பிறப்புச் சான்றிதழ்களின் புகைப்படப் பிரதிகள்
- தேசிய அடையாள அட்டையின் மூலப்பிரதி மற்றும் நிழற்பிரதி
பெற்றோர் திருமணமாகாதவர்களாக இருந்தால், தந்தையின் விபரங்களை உள்ளிடுவதற்காக பெற்றோர் இருவரும் பிறந்த இடத்திற்குரிய பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளரிடம் செல்ல வேண்டும்.
பிறப்பு நிகழ்ந்து 03 மாதங்களுக்குள் பிறப்பை இலவசமாகப் பதிவு செய்து கொள்ளலாம். பிறப்பு நிகழ்ந்து 03 மாதங்களின் பின்னரும் பிறப்பைப் பதிவு செய்ய முடியும் என்பதுடன் அதற்காக காலந்தாழ்ந்த பிறப்புப் பதிவு விபரங்களைப் பார்வையிடவும்.
பிறப்பு பதிவு செய்யப்பட்டதன் பின்னர், தகவல் கொடுப்பவருக்கு பிறப்புச் சான்றிதழின் பிரதியொன்று இலவசமாக வழங்கப்படும்.
பிறந்த திகதி மற்றும் இடம் என்பன தாய்க்குத் தெரிந்த தகவல்களின் அடிப்படையில் மாத்திரமோ (சந்தர்ப்பத்திற்கு ஏற்ப அதற்குக் குறைவான தகவல்களுடனோ) பிறப்பைப் பதிவு செய்ய முடியும். அவ்வாறான சந்தர்ப்பங்களில், வழங்கப்பட்ட தகவல்களுக்குரிய நிரல்களை மாத்திரம் பூர்த்தி செய்து பிறப்புப் பதிவேடு வழங்கப்படும்.
**நீங்கள் குறித்த பிறப்புச் சான்றிதழைப் பெற்றுக் கொண்டவுடன், அதை வாசித்து சரிபார்த்ததன் பின்னர் எடுத்துச் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
(1951 ஆம் ஆண்டின் 17ம் இலக்க பிறப்பு மற்றும் இறப்பு பதிவு செய்தல் கட்டளைச் சட்டத்தின் ஏற்பாடுகள் பொருந்தும்.)
வைத்தியசாலையில் (அரசாங்க அல்லது தனியார்) நிகழ்ந்த பிறப்பொன்றைப் பதிவு செய்தல்)
பிறப்பு பதிவு செய்யப்படுவது பிறப்பு நிகழ்ந்த இடத்திற்கான பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளரினால் ஆகும். (பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளர்களின் பட்டியல்) பிறப்பு நிகழ்ந்தது ஒரு வைத்தியசாலையில் என்றால் குறித்த இடத்திற்காக நியமிக்கப்பட்ட அல்லது வைத்தியசாலையில் நியமிக்கப்பட்டுள்ள பதிவாளருக்கு பிறப்பு பதிவு செய்வதற்காக அறிவிக்கப்படல் வேண்டும்.
பிறப்பினை பதிவு செய்வதற்காக அறிவித்தல் விடுப்பதற்கு தகுதிபெற்ற நபர்கள்,
- தந்தை
- தாய்
- குழந்தை பிறந்த நேரத்தில் அருகிலிருந்த நபர்கள், குழந்தையை பொறுப்பேற்றவர்கள்
- வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி
பெற்றோர் திருமணமாகாதவர்களாக இருந்தால், தந்தையின் தகவலை உட்சேர்ப்பதற்காக பெற்றோர் இருவரும், பிறப்பு நிகழ்ந்த வைத்தியசாலைக்குரிய பிறப்பு மற்றும் இறப்புப் பதிவாளரிடம் செல்ல வேண்டும்.
பிறப்பை அறிவிக்கத் தேவையான பதிவுக்கான CR01 படிவத்தைப் பிறப்பு மற்றும் இறப்புப் பதிவாளரிடமிருந்து பெற்றுக்கொள்ள முடியும் என்பதுடன் இணையதளத்திலிருந்தும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். ![]()
பிறப்பினை பதிவு செய்வதற்காக அறிவித்தல் விடுப்பதற்கு தகுதிபெற்ற நபர்களினால் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்:
- சரியாகப் பூர்த்தி செய்யப்பட்ட பதிவுக்கான CR01 படிவம்
- பிறப்பு நிகழ்ந்ததை உறுதிப்படுத்தும் வகையில் வைத்தியசாலையினால் வழங்கப்படும் அறிக்கை
- பெற்றோரின் திருமணச் சான்றிதழின் புகைப்படப் பிரதி
- பெற்றோரின் பிறப்புச் சான்றிதழ்களின் புகைப்படப் பிரதி
- தேசிய அடையாள அட்டையின் மூலப்பிரதி மற்றும் நிழற்பிரதி
அறிவிப்பவருக்குப் பிறப்புப் பதிவேட்டின் பிரதியொன்று இலவசமாக வழங்கப்படும்.
**நீங்கள் குறித்த பிறப்புச் சான்றிதழைப் பெற்றவுடன், அதை வாசித்து சரிபார்த்ததன் பின்னர் எடுத்துச் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
(1951 ஆம் ஆண்டின் 17ம் இலக்க பிறப்பு மற்றும் இறப்பு பதிவு செய்தல் கட்டளைச் சட்டத்தின் ஏற்பாடுகள் பொருந்தும்.)
பதிவு செய்யப்பட்ட தோட்டமொன்றினுள் நிகழும் பிறப்பொன்றைப் பதிவு செய்தல்
பிறந்த 07 நாட்களுக்குள் பிறப்பைப் பதிவு செய்வதற்கான அறிவித்தலை வழங்குவதற்கு தகுதியுள்ள பின்வரும் நபர்களால் தோட்ட அதிகாரியிடம் (தோட்ட அதிகாரியொருவர் இல்லாத சந்தர்ப்பத்தில் அல்லது தோட்ட அதிகாரி அறிவித்தல் விடுக்கும் பொறுப்பை ஏற்கவில்லையாயின் பிறப்பு நிகழ்ந்த இடத்திற்காக நியமிக்கப்பட்டுள்ள கிராம உத்தியோகத்தரிடம்) தெரிவித்தல் வேண்டும்.
தோட்ட அதிகாரி இல்லாத சந்தர்ப்பத்தில் கிராம உத்தியோகத்தரிடம் பிறப்பு தொடர்பாக அறிவிப்பதாயின் வீட்டில் நிகழ்ந்த பிறப்பைப் பதிவு செய்தல் தொடர்பான விபரங்களைப் பார்வையிடவும்.
தகவல் கொடுப்பதற்குத் தகுதிபெற்ற நபர்கள்
- தந்தை
- தாய்
- குழந்தை பிறக்கும் சந்தர்ப்பத்தில் அருகில் இருந்தவர்கள்
- பாதுகாவலர்
தோட்ட அதிகாரியினால் தோட்டத்தின் பிறப்பு அறிக்கையை உறுதிப்படுத்தி பிறப்பினை பதிவு செய்யும் நபரினால் வழங்கப்படும் பதிவு செய்தல் CR01 படிவத்துடன் மாவட்ட வைத்திய அதிகாரி ஊடாக மாவட்டச் செயலகத்தின் மேலதிக மாவட்டப் பதிவாளருக்கு அனுப்பப்படும்.
மேலதிக மாவட்டப் பதிவாளர் பிறப்பைப் பதிவுசெய்து, பிறப்புச் சான்றிதழை சம்பந்தப்பட்ட தோட்ட அதிகாரிக்கு அனுப்பி வைப்பார்.
தகவல் வழங்கியவர், தோட்ட அதிகாரியிடமிருந்து பிறப்புச் சான்றிதழை இலவசமாகப் பெற்றுக்கொள்ள முடியும்.
** நீங்கள் குறித்த பிறப்புச் சான்றிதழைப் பெற்றவுடன், அதை வாசித்து சரிபார்த்ததன் பின்னர் எடுத்துச் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
(1951 ஆம் ஆண்டின் 17ம் இலக்க பிறப்பு மற்றும் இறப்பு பதிவு செய்தல் கட்டளைச் சட்டத்தின் ஏற்பாடுகள் பொருந்தும்.)
வெளிநாட்டில் நிகழ்ந்த பிறப்பொன்றை சம்பந்தப்பட்ட நாட்டில் பதிவு செய்தல்
இலங்கை பெற்றோருக்கு (குறைந்தது ஒரு தரப்பினர் இலங்கையராக இருத்தல் வேண்டும்) வெளிநாட்டில் பிறந்த குழந்தைகளின் பிறப்புகளை வெளிநாட்டில் பதிவு செய்து கொள்ளலாம்.
பிறப்புகள் பதிவு செய்யப்படுவது பிறப்பு நிகழ்ந்த நாட்டிலுள்ள இலங்கை தூதரகம் / இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலகத்திலேயாகும்
பிறப்பு அறிவிப்பிற்குத் தேவையான பிரகடனப் படிவத்தை இலங்கைத் தூதரகம் / இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலகத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம்.
பிறப்பிளை பதிவதற்காக அறிவித்தல் வழங்குவதற்கு தகுதியான நபர்கள்,
- தந்தை
- தாய்
- பாதுகாவலர்
சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள், (மூலப்பிரதிகளுடன் நிழற்பிரதி தொகுதியொன்றும் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.)
- சரியாகப் பூர்த்தி செய்யப்பட்ட பிரகடனப் படிவம்.
- பிறப்பை உறுதிப்படுத்துவதற்குரிய ஆவணங்கள்(பிறப்பு நிகழ்ந்த வெளிநாட்டினால் வழங்கப்பட்ட பிறப்புச் சான்றிதழ் அல்லது வைத்தியசாலை அறிக்கை)
- பெற்றோரின் திருமணச் சான்றிதழின் புகைப்படப் பிரதி
- பெற்றோரின் பிறப்புச் சான்றிதழ்களின் புகைப்படப் பிரதி
- குழந்தை பிறக்கும் சந்தர்ப்பத்தில் பயன்படுத்திய கடவுச் சீட்டு மற்றும் விசா
- தாய் மற்றும் தந்தை வெளிநாட்டின் குடியுரிமையைப் பெற்றிருந்தால் அச் சான்றிதழ்
வெளிவிவகார அமைச்சினால் நிர்ணயிக்கப்பட்ட அரச கட்டணங்கள் அந்தந்த நாட்டின் செல்லுபடியாகும் நாணயத்தில் செலுத்தப்பட வேண்டும்.
வெளிநாட்டில் நிகழ்ந்த பிறப்பொன்றை இலங்கையில் பதிவு செய்தல்
ஒரு வருட காலப்பகுதிக்குள் அரசாங்கத்திற்கான கட்டணங்களைச் செலுத்தி, சம்பந்தப்பட்ட நாட்டில் உள்ள தூதரகம் / உயர்ஸ்தானிகராலயத்தின் ஊடாகப் பிறப்பொன்றைப் பதிவு செய்யத் தவறும் பட்சத்தில், அப்பிறப்பைக் காலந்தாழ்ந்த பிறப்பாகப் பதிவு செய்வதற்குப் பின்வரும் ஆவணங்களை அத்தூதரகம் அல்லது உயர்ஸ்தானிகராலயத்தில் ஒப்படைக்க முடியும். அவ்வாவணங்கள் அனுமதியைப் பெற்றுக்கொள்வதற்காக, சம்பந்தப்பட்ட தூதரகம் அல்லது உயர்ஸ்தானிகராலயத்தினால் 'சுஹுருபாய' கட்டிடத்தின் 15 ஆம் மாடியில் அமைந்துள்ள தூதரகப் பிரிவுக்கு (Consular Division) அனுப்பி வைக்கப்படும்.
சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள், (மூலப்பிரதிகளுடன் ஒரு தொகுதி நிழற்பிரதிகளும் சமர்ப்பிக்கப்பட வேண்டும்)
- சரியாகப் பூர்த்தி செய்யப்பட்ட பிரகடனப் படிவம்.
- பிறப்பை உறுதிப்படுத்துவதற்குரிய ஆவணங்கள் (பிறப்பு நிகழ்ந்த வெளிநாட்டில் வழங்கப்பட்ட பிறப்புச் சான்றிதழ் அல்லது வைத்தியசாலைப் பிறப்பு அறிக்கை)
- பெற்றோரின் திருமண சான்றிதழ் (பிரதேச செயலகத்தினால் உறுதிப்படுத்தப்பட்ட பிரதிகள்)
- பெற்றோரின் பிறப்புச் சான்றிதழ்கள் (பிரதேச செயலகத்தினால் உறுதிப்படுத்தப்பட்ட பிரதிகள்)
- பிள்ளை பிறக்கும் போது தாய் பயன்படுத்திய கடவுச்சீட்டு மற்றும் வீசா (Visa)
- தாய் மற்றும்/அல்லது தந்தை வெளிநாட்டுப் குடியுரிமை பெற்றிருப்பின் அதற்கான சான்றிதழ்.
அதேபோல், பிள்ளையின் பிறப்பு நிகழ்ந்து ஒரு வருட காலத்திற்கு முன்னரோ அல்லது பின்னரோ எந்தவொரு காலப்பகுதியிலும், சம்பந்தப்பட்ட வெளிநாட்டிலுள்ள தூதரகம் / உயர்ஸ்தானிகராலயத்தினால் பிறப்பு பதிவு செய்யப்படாவிடின், 'சுஹுருபாய' கட்டிடத்தின் 15 ஆம் மாடியில் அமைந்துள்ள தூதரகப் பிரிவில் (Consular Division) ஆவணங்களைச் சமர்ப்பிப்பதன் மூலம் பிறப்பைப் பதிவு செய்துகொள்ள முடியும்.
பிறப்பை அறிவிப்பதற்கான பிரகடனப் படிவத்தை 'சுஹுருபாய' கட்டிடத்தின் 15 ஆம் மாடியில் அமைந்துள்ள தூதரகப் பிரிவில் (Consular Division) பெற்றுக்கொள்ள முடியும்.
பிறப்பினை பதிவதற்காக அறிவித்தல் வழங்குவதற்கு தகுதியான நபர்கள்,
- தந்தை
- தாய்
- பாதுகாவலர்
அதற்காக வெளிவிவகார அமைச்சின் தூதரகப் பிரிவில் பதிவுக்கட்டணமாக ரூ. 13,755.00 செலுத்திப் பெற்றுக்கொண்ட பற்றுச் சீட்டை சமர்ப்பிக்க வேண்டும்.
** இது தொடர்பான மேலதிக விபரங்களை உதவிப் பதிவாளர் நாயகம், தூதரகப் பிரிவு, பதிவாளர் நாயகம் திணைக்களம், 15 ஆம் மாடி, "சுஹுருபாய", பத்தரமுல்ல என்ற முகவரியில் வினவுவதன் மூலமோ அல்லது பின்வரும் தொலைபேசி எண்கள் ஊடாகவோ பெற்றுக்கொள்ள முடியும். தொலைபேசி எண்கள்: +94 112 796 127 அல்லது 071 4425143.