Accessibility Tools

Information Icon

இலங்கையில் காணி சம்பந்தமாக (முதலீட்டாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விரைவாக தகவல்களைப் பெற்றுக்கொள்ளுதல்) தேவையான தரவுகளைப் பரிசோதிப்பதற்கும், முதலீட்டாளர்களுக்குச் சாதகமான முறையில் காணி உரிமைகளை விரைவாக உறுதிப்படுத்துவதற்கும் மென்பொருள் ஊடாக இணைய வழியில் (Online) வசதிகளை வழங்கும் ஒரு காணிப் பதிவுத் திட்டமாகும்

இ-காணி மென்பொருள் (e-Land Software)

திணைக்களத்தின் பின்னணி

பதிவாளர் நாயகம் திணைக்களம் என்பது பொதுமக்களின் சிவில் உரிமைகளையும் சொத்துக்களின் சட்டபூர்வ தன்மையையும் பாதுகாக்கும் 161 ஆண்டுகள் பழமையான திணைக்களமாகும். சொத்துக்களைப் பதிவு செய்யும் போது திணைக்களம் இதுவரை பின்பற்றி வந்த நடைமுறை, கைப்பட ஏடுகளில் (Folios) பதிவு செய்வதாகும். இந்த முறையைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், சொத்துப் பதிவுத் தகவல்களைப் பொதுமக்களுக்கும் ஏனைய நிறுவனங்களுக்கும் விரைவாக வழங்க முடியாத நிலை திணைக்களத்திற்கு ஏற்பட்டுள்ளது. அதேபோல், காணி ஆவணங்கள் இயற்கை காரணங்களினாலும் அடிக்கடி பயன்படுத்தப்படுவதாலும் அழிவடையும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. மேலும், காணி ஆவணங்களின் இரண்டாவது பிரதி இல்லாத காரணத்தினால், அழிவடைந்த காணி ஆவணங்களை மீண்டும் புனரமைப்பதற்கோ அல்லது வழங்குவதற்கோ தற்போதைய நடைமுறை ஒரு பலத்த தடையாக உள்ளது.

காணித் திட்டத்தின் ஆரம்பம்

சொத்துக்களைப் பதிவு செய்யும் போது காணிகள் தொடர்பான தகவல்களை விரைவாகப் பெற்றுக்கொள்ளும் வசதியை மேம்படுத்துவதன் மூலம், முதலீட்டாளர்களுக்கு வணிகங்களை எளிதாக்கும் சுட்டெண்ணில் (Ease of Doing Business Index) இலங்கையின் நிலையை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டு ஈ-காணி (e-Land) பதிவுத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன், 160 ஆண்டுகளைப் பூர்த்தி செய்யும் திணைக்களத்தை நவீனமயப்படுத்துவதற்கும் (Smartization), உரிமைப் பதிவுகளை இலகுபடுத்துவதற்கும் மென்பொருள் மூலம் தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் வசதியை ஏற்படுத்துவது இத்திட்டத்தை ஆரம்பிப்பதற்கான அடிப்படையாகும்.

இ-காணி மென்பொருளின் தேசிய முக்கியத்துவம்

பதிவாளர் நாயகம் திணைக்களத்தில் இதுவரை காணப்பட்ட பதிவு நடைமுறைகளிலிருந்து விடுபட்டு, பொதுமக்களுக்கு விரைவான சேவையை வழங்கக்கூடிய வகையிலும், சொத்துப் பதிவு மூலம் அரச நிறுவனங்களுக்கும் இலங்கையிலுள்ள ஏனைய அனைத்து நிறுவனங்களுக்கும் தேவையான தகவல்களை விரைவாக வழங்கக்கூடிய திறனை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. நவீன தொழில்நுட்ப உத்திகளைப் பயன்படுத்தி சொத்துப் பதிவிற்கான படிமுறைகள், நேரம் மற்றும் செலவைக் குறைப்பதன் மூலம் இலங்கையின் எதிர்கால அபிவிருத்திக்காக காணி நிர்வாகத் தொகுதியின் தரத்தைப் பாதுகாப்பதும், அதன் மூலம் சர்வதேச மட்டத்தில் இலங்கையின் முதலீட்டு நிலையை உயர் மட்டத்தில் பேணுவதும் இந்த மென்பொருள் மூலம் எதிர்பார்க்கப்படுகிறது.

மென்பொருள் மூலம் எதிர்பார்க்கப்படும் நோக்கங்கள்

  • பதிவு செய்யப்பட்ட தரவுகளின் பாதுகாப்பு மற்றும் இரகசியத்தன்மையை உறுதி செய்தல்.
  • பதிவுத் தகவல்களைப் பரிசோதிப்பதற்குத் தேவையானவாறு நிகழ்நிலை (Online Search) வசதியை வழங்குதல்.
  • பதிவு செய்யப்பட்ட தரவுகளை மத்திய களஞ்சியத்தில் ஒருங்கிணைக்கப்பட்ட டிஜிட்டல் வடிவில் பேணுதல்.
  • எதிர்காலத்தில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் பிரதிகள் மற்றும் சான்றிதழ்களை டிஜிட்டல் தரவுகள் மூலம் வழங்க நடவடிக்கை எடுத்தல்.
  • இலங்கையில் பதிவு செய்யப்பட்ட நோத்தாரிசுகளின் கடமைகளுக்கும் காணி அலுவலகங்களுக்கும் இடையே நிகழ்நிலை (Online Link) தொடர்பை ஏற்படுத்துதல்.
  • தேவையான அரச நிறுவனங்களுக்குப் பதிவு தொடர்பான தகவல்களை விரைவாக வழங்கக்கூடியவாறு மென்பொருள் ஊடாக வசதிகளை வழங்குதல்.

இந்த வேலைத்திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்குக் கிடைக்கும் வசதிகள்

  • சேவைகளைப் பெற்றுக்கொள்ள காணிப் பதிவு அலுவலகங்களுக்குச் செல்ல வேண்டிய அவசியம் இல்லாமை.
  • தற்போது பதிவு செய்யப்பட்டுள்ள ஏடுகளின் பாதுகாப்பை அதிகரிப்பதற்கும், ஏடுகளில் இடம்பெறும் முறைகேடுகளைக் குறைப்பதற்கும் நடவடிக்கை எடுத்தல்.
  • காணி உரிமையாளர்களுக்குத் தேவையான பிரதிகளை டிஜிட்டல் வடிவில் விரைவாகப் பெற்றுக்கொள்ள முடியுமை.
  • சேவைகளைப் பெற்றுக்கொள்ள காணிப் பதிவு அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்கள் இடைத்தரகர்களிடமிருந்து விடுபட முடியுமை.
  • நிகழ்நிலை (Online) முறையில் ஆவணங்களைப் பரிசோதிக்கவும் பிரதிகளுக்கு விண்ணப்பிக்கவும் முடியுமை.
  • சுத்தமான மற்றும் தெளிவான பிரதிகளைப் பெற்றுக்கொள்ள முடியுமை.

இ-காணி வேலைத்திட்டத்தின் தற்போதைய நிலை

இ-காணி மென்பொருளானது மூன்று கட்டங்களைக் கொண்டதுடன், அதன் முதலாம் கட்டம் தற்போது கொழும்பு, ஹோமாகம, களுத்துறை, அத்தனகல்ல, பதுளை, கேகாலை, குருநாகல், யாழ்ப்பாணம், இரத்தினபுரி ஆகிய காணிப் பதிவு அலுவலகங்களில் வெற்றிகரமாக நிறுவப்பட்டுள்ளது. ஏனைய காணிப் பதிவு அலுவலகங்களுக்கு இந்த முதலாம் கட்டம் படிமுறையாக நிறுவப்படவுள்ளது.

இரத்தினபுரி, அத்தனகல்ல, களுத்துறை, ஹோமாகம, கேகாலை, பதுளை ஆகிய காணிப் பதிவு அலுவலகங்களில் இந்த மென்பொருளின் இரண்டாம் கட்டம் நிறுவப்பட்டு அதன் முன்னோடித் திட்டம் (Pilot Project) பரீட்சிக்கப்பட்டு வருகின்றது.

இந்த மென்பொருளின் மூன்றாம் (III) கட்டம் தொடர்பான பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.